தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாள்களில் மட்டும் தமிழக அரசுத் துறைகளின் சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள பணிகளை மேற்கொள்வதற்கான 4,385 ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொள்ளையடிக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை வாரி இறைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடகப் பக்கங்களில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ”ஊரக வளர்ச்சி சார்பில் 229 ஒப்பந்தப்புள்ளிகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சென்னை மாந்கராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்பட 526 ஒப்பந்தப்புள்ளிகள், மின்சார வாரியம் சார்பில் 84 ஒப்பந்தப்புள்ளிகள் என நேற்று ஒரே நாளில் மட்டும் 839 ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றால், திமுக அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 12 நாள்களில் வழங்கப்பட்டுள்ள 4385 ஒப்பந்தப்புள்ளிகளில் 77%, அதாவது 3788 ஒப்பந்தப்புள்ளிகள் இந்த 3 துறைகளின் வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.” என்று தெரிவித்துள்ளார்.
”நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2100 கோடிக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் அவசர, அவசரமாக ஹைதராபாத் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதும், அதில் ரூ.700 கோடி வரை ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த ஒப்பந்தப்புள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதும் அனைவரும் அறிந்தது தான். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2000 கோடி நிதியை பயன்படுத்தி, அதற்கான ஒப்பந்தங்களை இப்போதே கோரியது என ஒப்பந்தங்களை வழங்குவதில் தான் திமுக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக அரசின் இந்த வேகத்துக்கு பின்னால் இருப்பது மக்கள் நலன் அல்ல. மாறாக கொள்ளையடிக்கும் குணம் தான். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் குறைந்த பட்சம் 20% கமிஷன் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படியானால், ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மூலம் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என கணக்கிட்டுக் கொள்ள முடியும். ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமல்ல என்பது உறுதியாகி விட்டதால் கிடைத்தவரை கொள்ளையடித்துக் கொண்டு ஓடும் முயற்சியில் திமுக ஈடுபட்டிருக்கிறது.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.