தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், முதன்மைப் பாடமான தமிழ் மொழித் தேர்வை 9,919 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. இத்தேர்வினை எழுத மாநிலம் முழுவதும் மொத்தம் 8,16,289 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இன்று நடைபெற்ற முதல் தேர்வில், பள்ளிகள் மூலமாக 7,99,692 மாணவர்களும், தனித்தேர்வர்களாக16,597 மாணவர்களும் பங்கேற்றுத் தேர்வை எழுதினர்.
விண்ணப்பித்தவர்களில் கணிசமான மாணவர்கள் முதல் நாளிலேயே தேர்வு எழுத வராதது கல்வித் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் பள்ளி மாணவர்கள் 8,319 பேர், தனித்தேர்வர்கள்: 1,600 பேர் என மொத்தம் 9,919 பேர் தேர்வு எழுதவில்லை. இது கல்வித்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.