டெங்கு பாதிப்பு 
தமிழ் நாடு

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 20,000 ஆக அதிகரிப்பு!

Staff Writer

சென்னையில் மட்டும் 4,592 பேர் உட்பட தமிழகத்தில் 20,000 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தாரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சென்னையில் ஆங்காங்கே காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமைப் பார்வையிட்ட தாரேஸ் அகமது, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு 20,000 ஆகப் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, 4,592 பேர் டெங்கால் பாதிப்படைந்துள்ளனர். இதனால், நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த முகாம்கள் மூலமாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறோம். டெங்குவைப் பொறுத்தவரை காய்ச்சல் குறையும் நேரத்தில் அபாயம் அதிகமாக இருக்கும்.

இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறோம். பருவகால மாறுபாடு காரணமாகவே டெங்கு பாதிப்பு அதிகரித்தது. தற்போது, சென்னையில் இதன் பாதிப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும், டெங்கை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம்." என்று தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram