தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் குழுவினருடன் இன்று மதியம் நடைபெற்ற தொகுது உடன்பாடு பேச்சுவார்த்தை.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் குழுவினருடன் இன்று மதியம் நடைபெற்ற தொகுது உடன்பாடு பேச்சுவார்த்தை.  
தமிழ் நாடு

தி.மு.க.விடம் கேட்டது 21 தொகுதிகளா... இல்லை என்கிறது காங்கிரஸ்!

Staff Writer

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று தொடங்கியுள்ளது. 

தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் காங்கிரஸ் பேச்சுக் குழுவினர், தொகுதி உடன்பாடு குறித்து பேசச் சென்றனர். காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் சல்மான் குர்சித், முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை முதலிய குழுவினரை, தி.மு.க.சார்பில் முன்னாள் மைய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.இராசா ஆகியோர் வரவேற்றனர். 

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை அடுத்தடுத்து தொடரும்.

இதனிடையே, சில காட்சி ஊடகங்களில் காங்கிரஸ் தரப்பில் 21 தொகுதிகளைக் கொண்ட விருப்பப்பட்டியல் தி.மு.க.விடம் தரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதை காங்கிரஸ் தரப்பு மறுத்துள்ளது. 

அதன் மாநில ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது என்றும் அதைப்போல ஒரு பட்டியல் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை என்றும் இது முற்றிலும் தவறான செய்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.