எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் நான்கு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் நான்கு படகுகளில் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் 22 பேரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக வியாழக்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 22 பேரையும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.