மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியபோது, ”இங்கு வந்திருக்கும் உங்களின் ஒவ்வொரு பூத்திற்கும் எவ்வளவு டார்கெட்? 350 வாக்குகள்! இந்த டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே, சுலபமாக, 2 கோடியே 60 இலட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் பெற்றுவிடலாம். இந்தத் தேர்தலில், நாம் 2 கோடியே 50 இலட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் பெற்றே ஆக வேண்டும்! இதை பெற்றுக் காட்டுவது உங்கள் பொறுப்பு!” என்று கட்டளையிட்டார்.
மேலும்,” உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த உதவிகளை செய்து தருவது என்னுடைய பொறுப்பு!” என்றும் அவர் கூறினார்.
” “2 கோடியே 50 இலட்சமா?” என்று பெரிய நம்பரை யோசித்து யாரும் ஷாக் ஆகாதீர்கள். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு 40-50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு செட் செய்திருக்கும் டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே போதும்! நான் சொன்ன நம்பர் வந்துவிடும்! 200 தொகுதி நிச்சயம்! 200 தொகுதிகளுக்கு கூடுதலாகவும் வெற்றி பெறுவதுதான் நம்முடைய இலட்சியம்!
அடுத்த 2 மாதம்! உங்களுக்கும் சரி - எனக்கும் சரி ‘No Rest’! ஒவ்வொரு வாக்காளரையும் நீங்கள் எல்லோரும் குறைந்தது
5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இப்படி புதுப்புது ஊடகங்கள் வந்தாலும், ஒருவரின் வீட்டு படியேறி சென்று, அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு பணிவாக வாக்கு கேட்கும் பிரசாரத்திற்கு எதுவுமே ஈடாகாது! ஆன்-லைன், ஆன்-ஃபீல்டு இரண்டிலும் தி.மு.க.வின் செயல்பாடுகள்தான் நிறைந்திருக்க வேண்டும்!
பரம்பரை பரம்பரையாக தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களை நாம் சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்! சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! இதை நீங்கள் ரிப்பீட் மோடில் செய்ய வேண்டும்! அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ‘ரிப்பீட்’ ஆகும்!
தேர்தல் அன்றைக்கு பூத்திற்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்களிக்கும் வரை, ஓய்வே இருக்க கூடாது! வீடுவீடாகச் சென்று பணிவாக... கனிவாக... மரியாதையாக... நட்பாக அணுக வேண்டும்!
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத அளவிற்கு ஏராளமான சாதனை திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம். பெண்களை எடுத்துகொண்டால் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை. மகளிர் விடியல் பயணம், போன்ற திட்டங்கள். மாணவர்களை எடுத்துகொண்டால், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் மூலமாக கல்லூரி மாணவ மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம். நான் முதல்வனில் திறன் பயிற்சிகள் கொடுக்கிறோம். இப்போது லேப்டாப்பும் கொடுக்கிறோம்.
மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற பல திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு துறையாக எல்லாவற்றையும் பட்டியலிட்டு சொன்னால் அதற்கே ஒரு நாள் ஆகிவிடும். என்னிடம் அவ்வளவு பெரிய லிஸ்ட் இருக்கிறது. இதுதான், திராவிட மாடல்! உங்களுக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறோம். அதில் அனைத்து சாதனைகளும் இருக்கின்றன. இது எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று சேர்த்து இந்த திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும் என்றால், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும் என்று நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்! அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்! அந்த நம்பிக்கையை தேர்தல் நாளில் வாக்குகளாக மாற்ற வேண்டும்! இதுதான் உங்கள் கடமை!
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்”, “ஸ்டாலின் மகளிர் படை” என்ற பெயரில் ஏற்கெனவே நம்முடைய கழக மகளிர் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் கலக்கிக்கொண்டு இருக்கிறோர்கள். நான் தினமும் உங்களின் பரப்புரை வீடியோவை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மக்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த பிரசாரங்களுக்காக உங்களுக்கு தேவைப்படும் தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் உங்களுக்கு வழங்கியிருக்கிறோம். அதில், நம்முடைய திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகள் இருக்கிறது.
ஒவ்வொரு குடும்பத்திலும் நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ஒருவராவது நிச்சயம் பயன்பெற்றிருப்பார்கள். அதனால், நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்யுங்கள்.
அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் – எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் – அங்கு, தி.மு.க.வும் – உதயசூரியனும்தான் இருக்க வேண்டும். தெருமுனைக் கூட்டங்கள் – திண்ணைப் பிரச்சாரங்கள் – சமூக வலைதள பிரச்சாரங்கள் என்று அனைத்திலும் நாம்தான் முத்திரை பதிக்க வேண்டும்.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.