முளைத்த நெல்மணிகளை காட்டும் விவசாயிகள் 
தமிழ் நாடு

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய 3 மத்திய குழுக்கள் தமிழகம் வருகை!

Staff Writer

நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழு தமிழகம் வருகிறது.

பருவ மழை பெய்து வருவதால், மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

நெல் கொள்முதலில் தாமதம் நிலவுவதால், மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கு வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் விளக்கங்களை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை தற்போது உள்ள 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி, கொள்முதல் விதிகளில் தளர்வு அளிக்க வேண்டும் என்று கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசின் இந்த கோரிக்கையை கள ஆய்வு மூலம் உறுதி செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மழையால் பாதித்த மாவட்டங்களில் நெல்லை சேகரித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்களை மத்திய கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைத்துள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட விவரம்: “நெற்பயிர் கொள்முதல் விதிகள் தொடர்பாக தளர்வு கோரி தமிழக உணவுத் துறை செயலரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. இதுகுறித்த தற்போதைய நிலையை அறிய, இந்திய உணவுக்கழகம் மற்றும் தமிழக அதிகாரிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். இதற்காக, உணவுத் துறையின் இருப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்தலைமையில் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்களுடன் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் உடனடியாக தமிழகம் சென்று பணிகளை தொடங்க வேண்டும். தமிழக அரசு மற்றும் இந்திய உணவுக் கழக சென்னை மண்டல அலுவலகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். பிறகு, இந்திய உணவுக் கழகத்தின் மண்டல, மாவட்ட அலுவலக பரிசோதனைக் கூடங்களில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். 3 குழுக்களும் இணைந்து ஆய்வு முடிவு களை அறிக்கையாக தயாரித்து,மத்திய உணவுத் துறைக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.