கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் காவிரி ஆற்றில் திதி கொடுக்கச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர்.
நெரூரில் உள்ள சதாசிவ பிரமேந்திராள் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரைக்கு இறந்தவர்களுக்குச் சடங்கு செய்ய அருணன்(61), சுரேஷ்(62), ஸ்ரீனிவாசன்(64) ஆகியோர் சென்றனர்.
ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில், சடங்குகள் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைக் கவனித்த அங்கிருந்த மக்கள், அவர்களைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு, மீட்புப் படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்களின் உதவியுடன் அவர்களின் உடல்களை மீட்டனர்.
ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஆழம் தெரியாமல் நீரில் இறங்குவதைத் தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.