எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்விக்கடன் ரத்து..! போட்டுத்தாக்கும் இபிஎஸ் வாக்குறுதிகள்!

Staff Writer

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவின் இரண்டாம் கட்டமாக ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

1. முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ. 2,000-மாக உயர்வு ; சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் 1,200 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

2. வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி :

மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.

3. ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் :

வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

4. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில், வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

•அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

•ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய மேன்யுவல் நடைமுறையே மீண்டும் பின்பற்றப்படும்.

5. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி.

* இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் கேள்விகளுக்கு இபிஎஸ் பதிலளித்தார்.

கேள்வி : திமுக தொடங்கியுள்ள தமிழகம் தலைக்குனியாது என்ற பிரச்சார பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

இபிஎஸ் : ஏற்கெனவே தலை தொங்கிவிட்டது. ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் இது காட்சிகளாக வந்து விட்டது. பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. அண்மையில் வடமாநிலத் தொழிலாளர் குடும்பத்தில் குழந்தை உள்ளிட்ட 3 பேர் இறந்துவிட்டார்கள்.

நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் வேலை செய்யும் பெண்ணை, கேன்டீன் முதலாளி, நண்பர்கள் என பலர் பாலியல் வன்கொடுமை செய்து, தமிழகம் மோசமாக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத்தான் நான் சொன்னேன், தலை நிமிர்ந்து அல்ல, தலை குனிந்து தொங்கிவிட்டது.

கேள்வி : முழுவதுமான தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்…?

இபிஎஸ் : படிப்படியாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறோம். நிறைய அறிவிப்புகள் இருக்கின்றன. எங்கள் தேர்தல் பணிக்குழு அதை எல்லாம் சரிபார்த்து முழு பட்டியலாக அதிமுக விரைவில் வெளியிடும். மேலும் பல அறிவிப்புகள் வரும்.

கேள்வி : ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று, எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தீர்கள், அது வருமா..?

இபிஎஸ் : ஏற்கனவே அறிவித்தவை எல்லாம் ஒவ்வொன்றாக வரும். ஆட்டோ ஓட்டுனர்கள் இன்னும் பல கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள், அந்த கோரிக்கைகளும் பரிசீலனையில் இருக்கிறது, இறுதி வடிவம் வந்தவுடன் வெளியிடுவோம்.

கேள்வி : திமுகவில் இன்னும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையே நடத்தவில்லை, ஆனால் நீங்கள் இவ்வளவு வேகமாகப் போகிறீர்களே..?

இபிஎஸ் : இதே ஊடக நண்பர்கள், எங்களை எப்படி கிண்டலும், கேலியுமாகப் பேசினீர்கள். இப்போது நீங்களே அந்த கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இரண்டு வாரத்திற்கு முன்பு ஸ்டாலின் அவர்களும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும், ’இபிஎஸ் கடை விரித்து வைத்துக்கொண்டு இருக்கிறார். அங்கு யாருமே கூட்டணிக்கு போகவில்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், இப்போது அதிமுகவும், என்டிஏவும் சேர்ந்து பலம் வாய்ந்த கூட்டணி அமைத்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, மற்றும் அமமுக எல்லாம் இணைந்திருக்கிறது. இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளது. இப்போது தமிழகத்தில் கூட்டணி என்று சொன்னால் அது, அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணி.

கேள்வி: விஜய் தொடர்ச்சியாக, அதிமுகவை விமர்சித்து வருகிறார், அதை எப்படி எடுத்துக்கொள்வது..?

இபிஎஸ் : அவர் வெளியே வந்து பொதுவெளியில் பார்த்தால் தான் தெரியும். அவர் பொதுவெளிக்கே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்த பின், 72 நாட்களாக அவர் வெளியே வரவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எந்தக் கட்சி எந்தெந்தக் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்குகிறது என்று தெரியவில்லை. இவரை வைத்து என்ன செய்வது..?

அவருக்கு ஒன்றுமே தெரியாத போது எங்களை கேள்வி கேட்டால் எப்படி? அவரை போய் கேள்வி கேளுங்கள். ஏற்கனவே அதிமுக கூட்டணி அமைக்கிற போது, ஐடி சோழா ஹோட்டலில் தெளிவுபடுத்திவிட்டோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் பேட்டியிலேயே சொன்னார். அதிமுக - என்டிஏ கூட்டணி இரண்டும் இணைந்து, புதிய கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என்று அமித்ஷா கூறி இருக்கிறார். இந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். எங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று தெளிவுபடுத்திவிட்டார்.

இதை விஜய், டிவி, பத்திரிகையில்கூட பார்க்கவில்லை. அதற்கு அவருக்கு நேரமில்லை, மக்களைப் பார்ப்பதில்லை, டிவியைப் பார்ப்பதில்லை, ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கட்சியினுடைய தலைவருக்கு இது எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். எதுவும் தெரியாமல் அறியாமல் பேசுகிறார். நாட்டில் நடக்கிற நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை.

ஒரு தடவையாவது பத்திரிகையாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள். செய்தியாளர்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னால் தான், நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர் புரிந்து கொள்ளட்டும்.

கேள்வி : திமுகவை தீய சக்தி என்றும், அதிமுவை ஊழல் சக்தி என்றும் விஜய் விமர்சித்து இருக்கிறார். உங்களுடைய பதில் என்ன..?

இபிஎஸ் : ஊழல் சக்தி என்று யாரை குறிப்பிட்டு சொல்கிறார், எங்களை ஊழல் என்று சொல்வதற்கு வழியே இல்லை. எம்ஜிஆர், அம்மாவை ரோல் மாடல் என்கிறார். நான் முதலமைச்சராக இருந்த போது என் மீது ஊழல் புகார் சொல்லப்பட்டு, அதற்கு நீதிமன்றம் சென்று, நிரபராதி என்று வந்திருக்கிறேன். எப்படி ஊழல் என்று சொல்ல முடியும்.? அவர் யாரை கூடவே வைத்திருக்கிறார்..? நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. அதிமுகவில் இருந்து தவெக சென்றவர், அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தவர். எங்களை குறிப்பிட்டுச் சொன்னால் அதற்குண்டான பதிலை நாங்கள் தெளிவாகச் சொல்வோம்.

கேள்வி : திமுகவும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் என்று சொல்லியது அதை செயல்படுத்தவில்லை. நீங்களும் அதையே சொல்லி இருக்கிறீர்கள். இது சாத்தியமா…?

இபிஎஸ் : சாத்தியம் என்பதால் தான் அறிவிக்கிறோம். கொடுக்கவில்லை என்றால் நீங்கள் திமுகவிடம் தான் கேட்க வேண்டும். யாரும் அவர்களை பார்த்து கேட்கவில்லையே, நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவோம். ஏற்கனவே நானும் எங்களுடைய தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.

கேள்வி : சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்வீர்களா..?

இபிஎஸ் : அதெல்லாம் ஏற்கனவே முடிந்துபோய் விட்டது. அதை திருப்பி திருப்பி ஏன் பேசுகிறீர்கள். நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன், விறுவிறுப்பான செய்திகளுக்காக, இனி இது போன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்.

கேள்வி : வரும் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் என்டிஏவிற்கும் நடக்கும் தேர்தல் அதனால் மக்கள் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் செய்யும் பிரசாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்…?

இபிஎஸ் : அவர் பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர், அவர் ஒரு கட்சிக்குத் தலைவராக இருப்பதே ஒரு வேதனையான விஷயம். நன்றாக சிந்துத்து பாருங்கள். எதற்காக தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக நடக்கிற தேர்தல். எங்களுடைய கூட்டணி தெளிவுபடுத்தியாச்சு.

எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இதற்கு மேல் என்ன வேண்டும்.? எங்கள் மீது புகார் சொல்ல ஒன்றுமே இல்லாததால், சரக்கு இல்லாததால் தான் ஸ்டாலின் வேறு ஒன்றை சொல்கிறார். அடுத்த ஆட்சி அதிமுக தான் என்று ஏற்கனவே முடிவாகி விட்டது.

கேள்வி: கொடநாடு வழக்கில் அம்மா ஆத்மா உங்களை துரத்திக்கொண்டே இருக்கும் என்று மனோஜ் பாண்டியன் சொல்லி இருக்கிறாரே..?

இபிஎஸ் ; அம்மா ஆன்மா துரத்துவதால் தான் அவர் திமுக ஓடிவிட்டார். ஆத்மா யாரை துரத்துகிறது என்று பார்த்தீர்களா.? உண்மையாக உள்ளவர்கள் எங்களை எல்லாம் அம்மா ஆசிர்வாதம் செய்வதால் நாங்கள் ஒன்றாக இங்கு இருக்கிறோம். யார் யார் துரோகம் செய்தார்களோ அவர்களை எல்லாம் அம்மாவின் ஆன்மா ஆட்டிபடைத்துக்கொண்டு இருக்கிறது.

கேள்வி: உதயநிதி ஸ்டாலின் என்டிஏ கூட்டணியை பிளாக்மெயில் செய்யப்பட்ட கூட்டணி என்று சொல்கிறார்..?

பதில்: அவர் ஏதாவது ஒன்று நினைத்துக்கொண்டு பேசுவார், அதற்கெல்லாம் என்னிடம் பதில் கேட்காதீர்கள். அதிமுக தேசிய அளவிலான கட்சி என்டிஏ கூட்டணி நாட்டை ஆளும் கட்சி. அந்த நாட்டில் தான் ஸ்டாலினும் இருக்கிறார். தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் தான். பல மாநிலங்கள் ஒன்றாக இணைந்து, அதை என்டிஏ ஆள்கிறது. அவர் வேறு நாட்டில் இருப்பது போல் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அவர் தான் அடிக்கடி மீனவர்களை மீட்கக் கோரி கடிதம் எழுதுகிறாரே… எதற்கு எழுதுகிறார். அந்த அதிகாரம் யாரிடம் இருக்கிறது. மத்திய அரசிடம் தான் இருக்கிறது. பேசுவதற்கு ஒன்றே இல்லாததால் தான், அவதூறு பரப்புகிறார்.

கேள்வி : நிதிநிலை மோசமான நிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அடுத்தடுத்து பல அறிவிப்புகளை வெளியிடுகிறீர்கள், அதிமுக அரசு எதற்கு முதல் கையெழுத்து இடும்.

இபிஎஸ் : ஒரு ரூபாய் வருவாய் கூட இல்லாத போதும் ஆட்சி செய்த கட்சி அதிமுக. கொரோனா காலத்தில் எங்களுக்கு என்ன வருமானம் வந்தது..? வரி வருவாய் இல்லாமலேயே ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. வரி வருவாயைப் பெருக்கி, நாங்கள் அறிவித்த திட்டங்களுக்கான நிதிகளை உருவாக்குவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவோம்.

கேள்வி : ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து எதற்கு போடுவீர்கள்…

இபிஎஸ் : அதெல்லாம் பிறகு சொல்வோம், இன்னும் நாட்கள் இருக்கிறது.

கேள்வி: கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி எடுக்கச் சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்டிருக்கிறார்கள்..?

இபிஎஸ் : எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டித்திருக்கிறோம். ஊடக நண்பர்கள் தான் அவர்களை தூக்கி பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதனால் உங்களை அடிக்கிறார்கள். இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம், அந்த திமுக கட்சி அப்படிப்பட்ட கட்சி. தயவுசெய்து இனிமேலாவது உண்மை செய்தியை வெளியிடுங்கள். உங்களுக்கு பாதுகாப்பு தரும் கட்சி அதிமுக. ஆனால், நீங்கள் எங்களை பார்த்துத்தான் குறை சொல்கிறீர்கள்.

இருமினால், தும்மினால் குறை சொல்கிறீர்கள், ஆனால் திமுக பற்றி ஒரு குறைகூட சொல்ல மறுக்கிறீர்கள். இதுபோன்ற செய்தி வேறு எந்த செய்திதாள்களிலும், டிவிக்களிலும் வராததால் தான் அவர்கள் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். உண்மைச் செய்தியை வெளியிடுங்கள். மக்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள், மக்களே முழு பாதுகாப்பு தருவார்கள். இருந்தாலும் அதிமுகவை பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு என்றைக்கும் பக்கபலமாக இருப்போம். எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.