”தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் 631 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த உலகமும் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய உழவர்களை தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2023ஆம் ஆண்டுக்கான தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. அந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 19,483 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 22,686 பேர் தற்கொலை செய்து கொண்ட மராட்டியத்திற்கு அடுத்த படியாக இந்தியாவில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு தான். அனைத்துத் தரப்பு மக்களும் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவதற்கு இது தான் மோசமான சான்று.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
”தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 631 விவசாயிகள். அவர்களில் 564 பேர் வேளாண்மையை மட்டுமே தங்களின் ஒற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட கூலித்தொழிலாளர்கள் ஆவர். 43 பேர் சொந்த நிலத்தில் வேளாண்மை செய்பவர்களும், 24 பேர் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவர்களும் ஆவர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 40 பேர் பெண்கள் ஆவர். விவசாயிகள் தற்கொலைகளைப் பொறுத்தவரை மராட்டியம், கர்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. உழவர்கள் வாழ வழியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதையே இது காட்டுகிறது.
அதற்கு முன் 2022ஆம் ஆண்டில் 738 விவசாயிகளும், 2021ஆம் ஆண்டில் 599 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உழவர்களின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் முதன்மையானது உழவர்களால் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாதது தான்.
விவசாயிகளின் வாழ்க்கை நிலை குறித்து ஆராய வல்லுனர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், இந்தியாவில் முழுக்க முழுக்க உழவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.27 மட்டும் தான் வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை; கொள்முதல் விலை சொல்லிக்கொள்ளும்படியாக அதிகரிக்கவில்லை; அதனால் விவசாயிகள் படிப்படியாக கடன் வலையில் சிக்கி, இப்போது மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொண்டதாகவும் அக்குழு அதன் இடைக்கால அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.
கடன் சுமை அதிகரித்து விட்டதால் தான் உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்தக் குழு, விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வாக பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உழவர்களின் நலன்களைக் காக்க ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா? என்றால் இல்லை என்பது தான் எதார்த்தமான பதில் ஆகும். முந்தைய அதிமுக அரசு அதன் பதவிக்காலத்தின் இறுதியில் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியிருந்த ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அடுத்த சில காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை அடுத்து பொறுப்பேற்ற திமுக அரசு தான் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்தால் பயிர்க் கடனகள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, முந்தைய ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியில் பாதியைக் கூட செயல்படுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றியது.
திமுக ஆட்சியில் ஒரே ஒரு பாசனத் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை; நெல்லுக்கான கொள்முதல் விலையுடன் இணைத்து வழங்கப்படும் ஊக்கத்தொகையை கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.81 மட்டுமே திமுக அரசு உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் செய்ய பணமாகவும், நெல்லாகவும் ரூ.275 வரை பறித்துக் கொள்கின்றனர்; கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் என்று உழவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று வரை அக்கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை. அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதை செயல்படுத்தவில்லை. இவை அனைத்தையும் கடந்து வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் சேதனடையும் பயிர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு கூட வழங்கப்படுவதில்லை. இத்தகைய உழவர் விரோத கொள்கைகள் தான் உழவர்களை கடன்காரர்களாகவும், வாழ்வாதாரத்திற்கு ஏங்குபவர்களாகவும் மாற்றுகின்றன. இவை தான் தற்கொலைக்கும் தூண்டுகின்றன.
தமிழ்நாட்டு உழவர்களின் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் திமுக அரசுக்கு இல்லை.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.