சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது, முப்பத்து எட்டாயிரம் கோடி ரூபாய்க்குப் பதிலாக முப்பதாயிரம் கோடி ரூபாய் என்று பேரவைத்தலைவர் அப்பாவு திருத்தினார். இதனால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது.
அமைச்சர் தென்னரசு பேசுகையில், ”கடந்த நிதியாண்டில் மொத்தம் 50,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு புதிய தேசிய அதிவேக நெடுஞ்சாலை வழித்தடங்கள் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டன; அதில் மூன்று உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. 11,846 கோடி ரூபாய். குஜராத்துக்கு 10,534 கோடி ரூபாய். மகாராஷ்டிரத்துக்கு 17,827 கோடி ரூபாய். மொத்தமாகக் கூட்டிப்பார்த்தால் இந்த மாநிலங்களுக்கு 30 ஆயிரத்து 207...” என்று குறிப்பிட...
உடனே குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, முப்பத்தெட்டு எனத் திருத்தினார்.
இதனால், அவையில் கலகலப்பு ஏற்பட்டது.
அமைச்சரும் சமயோஜிதமாக, சமாளித்து, அவர்(அப்பாவு) வாத்தியார் இல்லையா? என்னதான் அமைச்சரே விட்டுவிட்டாலும்கூட எனக்கும் எடுத்துக்கொடுக்கும் ஆசிரியராகத்தான் சபாநாயகர் இருக்கிறார் என்றார்.
நிதி ஒதுக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், எட்டு சாலைகளில் தமிழ்நாட்டுக்கு ஒரு சாலைகூட ஒதுக்கப்படவில்லை; எட்டில் ஒன்றுகூட தெற்குக்கு ஒதுக்கப்படவில்லை என்று அமைச்சர் தென்னரசு ஒரு நொடியில் சீரியசாக ஆனார்.
நிதி ஆணையத்தில் போனபோது, நம்மை தில்லிக்காரர்கள் வளர்ச்சியடைந்த மாநிலம் என்கிற பெயரில் தமிழ்நாடு வஞ்சித்து, ஒதுக்கப்படுகிறது என்பதை அ.தி.மு.க.வினரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.