தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருக்கும் ஏ.கே.எஸ் விஜயனின் தஞ்சாவூர் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது முதல் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன் இருந்து வருகிறார். முன்னாள் எம்பி-யான இவர் திமுகவின் மாநில விவசாய அணி செயலாளர் ஆகவும் இருந்து வருகிறார்.
இவரது வீடு தஞ்சாவூரில் உள்ள சேகரன் நகரில் அமைந்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏகேஎஸ் விஜயனின் மனைவி ஜோதிமணி தனது மகளுடன் நாகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த சூழலில் ஏகேஎஸ் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை 8:30 மணிக்கு தஞ்சையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன.
சுமார், 300 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை திருடு போயிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதுகுறித்து ஏகேஎஸ் விஜயனின் மனைவி ஜோதிமணி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீடு முழுவதும் பார்வையிட்டு சோதனை செய்தனர்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து சென்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தை எஸ்பி ராஜாராமும் பார்வையிட்டு சோதனை மேற்கொண்டார். திமுகவின் முக்கிய நிர்வாகி இல்லத்திலேயே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.