திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை அருகே வேன் மோதியதில், சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
வடமதுரை அடுத்த கொல்லப்பட்டி சமத்துவபுரம் கணவாய்மேடு பகுதியில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் அஞ்சலை(60) என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
கொல்லப்பட்டியிலிருந்து புத்தூர் செல்லும் சாலையோரமாக அஞ்சலையுடன் அவரது பேரக் குழந்தைகளான ந. யோகவர்ஷினி(11), ந. அனன்யா(6), ஜெ. தனுஸ்ரீ(5), சி. மோஷிகரன்(6) ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக புத்தூர் நோக்கிச் சென்ற பால் வேன் சாலையோரமாக அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அஞ்சலையுடன் அவரது பேரக் குழந்தைகளான 4 பேர் மீதும் மோதியது.
இதில் படுகாயமடைந்த குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வடமதுரை போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு, உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சலை சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய அய்யலூர் குருந்தம்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார்(25), விபத்து நடந்த இடத்தில் இருந்து நேராக வீட்டிற்கு வேனை ஓட்டிச் சென்றார். போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.