சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு 
தமிழ் நாடு

அடுத்த 4 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம்- அப்பாவு தெரிவிப்பு!

Staff Writer

தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை நாளை கூடுகிறது. தொடர்ந்து நான்கு நாள்கள் இந்த அமர்வு நடைபெறும். 

சட்டப்பேரவையில் சற்றுமுன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.  

முன்னதாக அவருடைய தலைமையில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கவில்லை.

மறைந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமிக்கு நாளை இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படும் என்றும் அடுத்த மூன்று நாள்களில் அவையில் கூடுதல் மானியக் கோரிக்கை அளிக்கப்பட்டு, விவாதம் நடைபெறும். அக்.17ஆம் தேதி விவாதத்திற்குப் பதில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மூன்று நாள்களிலும் காலையில் வினா- விடை இடம்பெறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

சட்டவரைவுகள் ஏதும் கொண்டுவரப்படுமா என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, சிரித்தபடியே, அதைக் கொண்டுவருகிறவர்களிடம்தானே கேட்கவேண்டும் என அப்பாவு பதிலளித்தார்.

உட்கட்சி விவகாரம் தொடர்பாக பா.ம.க. தரப்பில் கடிதம் தரப்பட்டுள்ளதே என இன்னொரு செய்தியாளர் கேட்டதற்கு, ”அது என்னுடைய பரிசீலனையில் உள்ளது.” என்றார் அவர்.