விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் நேற்று ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (32) என்பவர், அவருடைய தோட்டத்தில் தகரக்கூரை அமைத்து எந்தவித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தார். நேற்று பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றபோது, மருந்துக் கலவைகளில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ராம்பிரகாஷ், மீனம்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி இன்னாசிமுத்து, ஐயப்பராஜா, பாண்டித்துரை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வெடி விபத்தின்போது, 3 கி.மீ. தூரத்திற்கு நில அதிர்வு ஏற்பட்டதுடன், பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகையும் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இருப்பினும், பட்டாசுகள், பட்டாசுகள் தயாரிக்க உதவும் மூலப்பொருட்கள் வெடித்துச் சிதறியதால், தீயணைக்கும் பணி ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மேலும், 90% காயங்களுடன் சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் உயிரிழந்த நிலையில், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.