சென்னை, மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிவந்த இரண்டு மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆகஸ்ட் 1 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 75 நாள்களைக் கடந்து இன்றும் அவர்களின் போராட்டம் தொடர்ந்துவருகிறது.
எழுபத்தாறாவது நாளாக இன்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சட்டப்பேரவையின் 234 உறுப்பினர்களிடமும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நேரில் வலியுறுத்த அவர்கள் முயன்றனர்.
அண்ணா சாலை பெரியார் சிலையிலிருந்து சட்டப்பேரவையை நோக்கி அவர்கள் செல்லமுயன்றபோது, அவர்களைக் காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர். அடுத்தடுத்து அணி அணியாக வந்த தூய்மைப் பணியாளர்களை மேற்கொண்டும் செல்லமுடியாதபடி காவல்துறை கைதுசெய்தது.
பின்னர், மாநகராட்சி மேயரிடமும் ஆணையரிடமும் மனு கொடுக்கச் சென்ற அவர்களை, காவல்துறையினர் தள்ளிவிட்டனர். இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது.
ஆலந்தூரில் 68 பேர், மடிப்பாக்கத்தில் 26 பேர், மாம்பலத்தில் 20 பேர் உட்பட மொத்தம் 110 தூய்மைப் பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டு ஆலந்தூரில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.