வானம்பாடி இயக்கக் கவிஞரும் முதுபெரும் தமிழ்ப் பேராசிரியருமான ஈரோடு தமிழன்பன் சென்னையில் இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 92.
மூப்பு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரபுக் கவிதை, புதுக்கவிதை, உரைநடை என ஏராளமாக எழுதிக் குவித்த கவிஞர் தமிழன்பனின் இயற்பெயர் நா.ஜெகதீசன். தமிழ் மீது உள்ள பற்றினால் தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்சனில் கணீர்க் குரலில் இவர் செய்தி வாசிப்பதைக் கேட்பதற்கே ஒரு காலத்தில் இலட்சக்கணக்கானோர் இரசிகர்களாக இருந்தனர்.
நூற்றுக்கணக்கான கவியரங்கங்களில் பங்கேற்று கவிதைகள் படைத்தும், தலைமையேற்றும் தொடர்ந்து தமிழ்ப் பணியில் இயங்கிவந்தவர், தமிழன்பன்.
அடுத்தடுத்த கவிதைத் தலைமுறையினருடனும் நட்பைப் பேணிய அவரின் பாங்கு, தமிழ்ப் படைப்பாளிகளைக் கவர்ந்த ஒன்று.
மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனக் கூறிவரும் ஒரு தரப்புக்கு மாறாக, அடுத்த தலைமுறைகள் தமிழை வாழவைக்கும் என எல்லா இடங்களிலும் நம்பிக்கையோடு சொல்லி, ஊக்கமும் உற்சாகமும் அளித்துவந்தவர் ஈரோடு தமிழன்பன் என்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.