வைகோ 
தமிழ் நாடு

97 இலட்சம் பெயர்கள் : தீவிர கள ஆய்வு செய்யப் போகிறார் வைகோ!

Staff Writer

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து தீவிரமாக கள ஆய்வு செய்யும் கடமையை ம.தி.மு.க. முதலிய கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் வாக்குச்சாவடி முகவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். 

”தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் நடந்தது போலவே தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் குளறுபடிகள் ஏற்படும் என்று முன்பே நாம் எச்சரிக்கை செய்துததுதான் நடந்திருக்கிறது.

இதனை எதிர்பார்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் திமுக மற்றும் மறுமலர்ச்சி திமுக சார்பிலும் எஸ் ஐ ஆர் பணிகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் வாக்காளர்களில் இடம்பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் என்று 64 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஐயப்பாட்டை எழுப்புகிறது.” என்றும், 

”தகுதி உள்ள வாக்காளர்கள் பெயர், பட்டியலில் விடுபட்டு இருந்தால் உடனடியாக படிவம் 6 ஐ பூர்த்தி செய்தும், பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை இருப்பின் படிவம் 7 , முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஆகியவற்றை ஜனவரி 18ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும் .

சட்டமன்றத் தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது.” என்றும் வைகோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.