”தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தான் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தமக்கு இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்ததாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளில் ஒன்றே ஒன்று மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் 99% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்வரே சட்டப்பேரவையில் பொய் சொல்வது கண்டிக்கத்தக்கது.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
”2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக திமுக அரசு மொத்தம் 10 வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் ‘‘அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பணிக் காலத்தில் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பநல நிதி ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் (வாக்குறுதி எண் &314)’’ என்ற ஒற்றை வாக்குறுதியை மட்டுமே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றியுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் (வாக்குறுதி எண்&-309) என்ற வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 3&ஆம் தேதி அறிவித்தார். இது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட திட்டம் அல்ல... இது மோசடித் திட்டம். இந்தத் திட்டம் கூட செயல்பாட்டுக்கு வருமா? என்பது தெரியவில்லை.
ரூ.8 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் (வாக்குறுதி எண் &- 311) என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 28- நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும், தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும் (வாக்குறுதி எண் &- 313) என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் நேற்று முன்நாள் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் முதலமைச்சருக்குத் தெரியுமா?
* மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 70 வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80 வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 308)
* தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 310)
* பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும். (வாக்குறுதி எண் & 312)
* அதிமுக அரசினால் பழிவாங்கும் நோக்கத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட மக்கள்நலப் பணியாளர்கள் இயற்கை எய்தியிருந்தால் அவர்களது வாரிகளுக்கு அரசு வேலை வழங்குவதோடு, குடும்ப நிவாரண நிதியாக 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 315)
* பள்ளிக் கல்வித்துறையில் பகுதிநேரப் பணியாளர்களாகப் பணிபுரிந்து நிரந்தரமாக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் 50% பகுதிநேரப் பணிக் காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்குக் கணக்கில் எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 316) ஆகிய வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்பதையாவது முதலமைச்சர் அறிவாரா?
அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதால் தான் அரசு ஊழியர்கள் தமக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்ததாகவும் முதலமைச்சர் இன்னொரு பொய்யை கூறியிருக்கிறார். யாருக்கும் உதவாத ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து விட்டு, திமுக ஆதரவு அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து வைத்து கட்டாயப்படுத்தி முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்ட வைத்த நாடகத்தை அரசு ஊழியர்கள் இன்னும் மறக்கவில்லை. அத்திட்டம் அறிவிக்கப்பட்டதன் மூன்றாவது நாளிலேயே அது ஒரு மோசடித் திட்டம் என்று கூறி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை முதலமைச்சர் மறந்து விட்டாரா?
சட்டப்பேரவை என்பது மிகவும் புனிதமான இடம். அங்கு உண்மைகளை மட்டுமே பேச வேண்டும். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் உள் இட ஒதுக்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள் என அனைத்திலும் முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் சட்டப்பேரவையில் பொய்யை மட்டுமே கூறுகிறார்கள்.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.