கொலை 
தமிழ் நாடு

காதலிக்க மறுத்த +2 மாணவி... வழிமறித்த இளைஞர்... அரங்கேறிய கொடூரச் செயல்!

Staff Writer

காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாரியப்பனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (21) என்ற இளைஞர் பள்ளி மாணவியை கடந்த சில நாள்களாக காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது தந்தை மாரியப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து முனிராஜ் வீட்டிற்கு சென்ற மாரியப்பன் இளைஞரை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி ஷாலினியை வாலிபர் வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவியோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை சற்று எதிர்பாராத மாணவி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து முனியராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறைமுக போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.