தமிழ் நாடு

விஜய் கார் முன் பாய்ந்த பெண் நிர்வாகி... கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்...!

Staff Writer

பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு விஜய் வந்த காரை தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழி மறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா. இவரது அண்ணன் மற்றும் அஜிதா இருவரும் விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் அஜிதாவின் அண்ணன் பொறுப்பு வகித்த நிலையில், பின்னர் அவர் திமுகவிற்கு சென்றார். இந்த நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நிலையில் கட்சியின் முதல் மாநாடு முடியும் வரை மாவட்ட பொறுப்பாளர் என்ற முறையில் அஜிதாவிற்கு கட்சியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கு பின் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியின் செயற்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அஜிதாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. கட்சியின் இரண்டாம் ஆண்டு கூட்டத்திற்கும் அழைப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அஜிதா மற்றும் அவரது தரப்பு ஆதரவாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அஜிதா தனக்கு தவெக மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருப்பதால் அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று கேட்டு அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். விடுபட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க அக்கட்சி தலைவர் விஜய் இன்று பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தனது காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென விஜயின் காரை வழிமறித்தனர். மேலும் அஜிதா கையில் ஒரு மனு வைத்திருந்த நிலையில் சார்.. சார்.. என்று அழைத்த போதும் அது குறித்து விஜய் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மேலும் அவரது கார் தொடர்ச்சியாக நகரத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அஜிதாவையும் அவரது ஆதரவாளர்களையும் பவுன்சர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.

விஜயின் கார் அலுவலகத்திற்குள் சென்றதை தொடர்ந்து அஜிதா அலுவலகத்திற்குள் சென்று விஜயை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த நிலையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தவெக நிர்வாகிகளே அக்கட்சித் தலைவர் விஜயின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.