திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் போலியான சான்றிதழ் கொடுத்து, மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடந்தது. இதில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் மொத்தம் 30 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி பழனியை சேர்ந்த காருண்யா ஸ்ரீவர்ஷினி மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்ததாக கூறினார். அத்துடன் தனது தந்தை சொக்கநாதன், தாயார் விஜயமுருகேஸ்வரி ஆகியோருடன் வந்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.
மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில் மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஆய்வு செய்ததில் மாணவி நீட் தேர்வில் 228 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாகவும், அதன்மூலம் கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும் போலியாக சான்றிதழ்களை தயாரித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ்களை தயாரித்து அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி (வயது19), சொக்கநாதன் (50), விஜய முருகேஷ்வரி (43) ஆகியோரை கைது செய்தனர்.
சொக்கநாதன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சர்வேயராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு யார் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.