விருதுநகர் அருகே 15 வயது சிறுமியை காரை ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்து வருபவர் கருணாநிதி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குண்டுமலை என்பவருக்கும் கோவில் வரி தொடர்பாக நீண்ட நாள்களாக பகை இருந்துள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் தூண்டுதலின் பேரில், கருணாநிதியின் மகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று கருணாநிதியின் மகள் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அவரை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனைக் கண்ட சிறுமி விரைந்து நகர்ந்துள்ளார். இதனால், வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் சென்றது.
சிறுமி துரிதமாக விலகியதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தை கருணாநிதியை, காரில் வந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.