நடிகை விஜயலட்சுமி வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனயற்ற மன்னிப்பை கோரினார் .
நடிகை விஜயலட்சுமி 2011 ஆம் ஆண்டு சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கடந்த மார்ச் மாதம், உச்ச நீதிமன்றம் இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வர அறிவுறுத்தியது. அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், நடிகை விஜயலட்சுமி தரப்பில், "சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதிதான் வேண்டும்" என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த மாதம் 12 ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சீமான் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மன்னிப்பு கோரத் தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
மேலும், விஜயலட்சுமியுடன் சுமுகமாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து சீமான் தரப்பில், மன்னிப்பு கோரி ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணை வந்தது. அப்போது சீமான் தரப்பில், தனது சொல், செயல்களால் விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட எந்தவொரு வலி அல்லது காயத்திற்கும் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருவதாகவும், விஜயலட்சுமிக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயலட்சுமி குறித்து ஊடகங்களில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என உறுதியளிப்பதாகவும் , அதேபோல் விஜயலட்சுமியும் தனக்கு உரிய மரியாதை வழங்குவார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், எந்த கரணத்துக்காகவும் விஜலட்சுமியை தொடர்பு கொள்ள மாட்டேன் என்றும் ஏதேனும் தேவை ஏற்பட்டால், வழக்கறிஞர்கள் வழியாக மட்டுமே தொடர்பு கொள்வேன். எனவே தனது மன்னிப்பு பிரமாண பத்திரத்தை ஏற்று தற்போதைய நடவடிக்கைகளை முடித்து வைக்க வேண்டும் என சீமான் தனது பிரமாண பத்திரத்தில் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து நடிகை விஜயலட்சுமி தரப்பில், சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது தனது கண்ணித்தை மீட்டெடுக்கும் என்பதால், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் சீமான் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக உள்ளேன். அதேவேளையில், சீமான் மற்றும் அவர்களது ஏஜெண்ட்களால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்
எனது குடும்பம் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளது. எனது தாயை இழந்துவிட்டேன், தற்போது தனது சகோதரிக்கு கை, கால் செயலிழந்துள்ளதால் அவரையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. நான் சீமானால் பாதிப்படைந்துள்ளேன் எனவே தனது வாழ்வாதாரத்துக்காக உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரினார். ஜயலட்சுமி தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஏற்க முடியாது என சீமான் தரப்பினர் தெரிவித்தனர்.
இதையடுத்து இருதரப்பினர் வாதத்தையும் ஏற்ற நீதிபதிகள், விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இரு தரப்பும் பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி கூறியதை தொடர்ந்து வழக்கை உச்சநீதிமன்றம் சுமூகமாக முடித்து வைத்தது.