எடப்பாடி பழனிசாமி - விஜய் 
தமிழ் நாடு

ஜல்லிக்கட்டை இழிவு... எம்.எல்.ஏ.வைப் பேசவைத்தாரா விஜய்?- அ.தி.மு.க. கண்டனம்

Staff Writer

தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி ஆளும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

”ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?

மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான பஸ்ட் லுக்காக தனது எம்.எல்.ஏ.-வைப் பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.

தனது எம்.எல்.ஏ. பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!

(பி.கு. : முதல்வர் விஜய், ஒருவேளை நீங்கள் மறந்திருந்தால்... 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும்)” என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.