சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ் நாடு

துணைபோன முதல்வர் மீது என்ன நடவடிக்கை?- அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை

Staff Writer

த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அ.தி.மு.க. வழக்கறிஞர் திரிசூலி என்பவர், த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக முறையான புகார் அளிக்கப்படவில்லை என்று நேற்று கூறப்பட்ட நிலையில், பிற்பகலில் மாவட்ட ஆட்சியர் சார்பில் முறையாகப் புகார் அளிக்கப்பட்டதாக காவல்துறை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. எம்.பி. வழக்கறிஞர் இன்பதுரை பேசியதாவது:

"நீதிமன்றம் இதுதொடர்பாக விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் எங்கள் பணி முடிந்துவிட்டது.

ஆனால், இந்த வழக்கைப் பதிவு செய்ய விடாமல் தடுத்தது யார்? இதற்குத் துணைபோனவர்கள் யார்? அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து அறிய வேண்டும்.

இந்த வழக்கு பதியப்படாமல் இவ்வளவு நாள் காலம் தாழ்த்தியதால் காவல்துறை மீது இருந்த நம்பிக்கை குறைகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு பரிசீலனை செய்யத் தோன்றுகிறது. இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று பொதுவெளியில் கூறிய அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர் அருண்ராஜ், அமைச்சர் ஆனந்த் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

அதேபோல, இந்த சம்பவத்தில் முதலமைச்சர் என் அமைதி காத்தார்? அந்த எம்.எல்.ஏ.வை மகாபலிபுரத்தில் சந்தித்தார்தானே? நேரில் சந்தித்தும் கண்டிக்காதது ஏன்?" என்று பல்வேறு கேள்விகளை இன்பதுரை எழுப்பியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram