எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல், அன்புமணி 
தமிழ் நாடு

இன்று இரவுக்குள் அ.தி.மு.க. தொகுதிப் பங்கீடு முடியும்- எடப்பாடி பழனிசாமி

Staff Writer

அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இன்று இரவுக்குள் தொகுதிகள் விவரம் அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மைய அமைச்சரும் பா.ஜ.க. மேலிட தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், அ.தி.மு.க. தலைமையகத்துக்கு இன்று வந்தார். மூன்று கட்சிகளுக்கான ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டதை பழனிசாமி அறிவித்தார்.

அப்போது, டெல்லிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைப் பற்றிக் கேட்டதற்கு, தி.மு.க.வின் கனிமொழி டெல்லிக்குச் சென்று இராகுலைச் சந்தித்துப் பேசியது ஏன் என அவர் வினவினார். ஒரு கூட்டணி என இருந்தால் கருத்தைப் பரிமாறிக்கொள்வது இயல்பு என்றும் தி.மு.க. தவறான பிரச்சாரம் செய்துவருகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், தங்கள் கூட்டணிக்குள் ஒரே நாளில் பேசி மூன்று கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை அறிவித்துள்ளதாகவும் ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இருபது நாள்களுக்கும் மேலாக இழுபறி நீடிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இடையில் புகுந்து பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி, தான் மாநிலங்களவையில் கையெழுத்திடச் சென்றதையும் தவறாகச் சித்திரித்ததாகக் குறிப்பிட்டார்.

இராமதாஸ்- சசிகலா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அவசர அவசரமாக செய்தியாளர் சந்திப்பை நிறைவுசெய்தார், எடப்பாடி பழனிசாமி.