வேளாண் - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத்  
தமிழ் நாடு

திட்டங்கள் பெயர் மாற்றம் ஏன்? - வேளாண் அமைச்சர் வினோத் விளக்கம்

Staff Writer

சட்டப்பேரவையில் தாக்கல்செய்த வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதத்துக்கு வேளாண் - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் இன்று பதிலுரை வழங்கினார்.

அப்போது, நிதிநிலை அறிக்கையின்போது அறிவித்த திட்டங்களையே இன்று மீண்டும் அவர் கூறினார்.

அவையில் அவர் பேசியதாவது:

" த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற 40 நாள்களில், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், ரூ.6,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை முதல்வர் விஜய் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே செயல்முறைப்படுத்தி வரும் திட்டங்களில், விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும் திட்டங்கள் அப்படியே தொடரப்படுகின்றன.

உறுப்பினர்கள், ஏற்கெனவே செயல்படுத்திவரும் திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி அறிவித்துள்ளதாகக் கூறினர்.

நடைமுறையில் உள்ள சில திட்டங்களில், விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெறாத கூறுகளை நீக்கி, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப கூறுகளைப் புகுத்தி, புதிய வடிவமைப்புடன் அவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த காலங்களில் செயல்பட்டுவந்த கலைஞரின் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், 12,525 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு 2025-26ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது.

அத்திட்டத்தின் கூறான ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு, மின் இணைப்பு அல்லது சூரியசக்தியுடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிடாமல், அதனையும் இணைத்து அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் உருவாக்கப்பட்டு, இதற்கென ரூ.56 கோடியே 72 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் பயிர் விளைச்சல்களுக்கான விருதுக்கான போட்டிகளில் குறு, சிறு விவசாயிகளும் பங்கேற்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மாடித் தோட்டத்தில் வழங்கப்பட்டு வரும் தொகுப்புப் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை அடுத்த மோரனப்பள்ளியில் உள்ள பன்னாட்டு மலர் ஏல மையம் செயல்படாமல் இருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, 100% தொகையை மலர் வாங்குபவர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும், மலர் உற்பத்தியாளர்கள் இடையேயான வங்கி கடன் தொடர்புகள், நேரடி சந்தைப்படுத்துதல், மலர்களின் தரம் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

எனவே, மலர் வணிகத்தை அதிகரிக்கும் நோக்கில், மலர் உற்பத்தியாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் ஒரு சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்பவே தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன." என்று அமைச்சர் பேசினார்.

இதைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன், ”வட மாநிலங்களில் 100% இயற்கை விவசாயம் பின்பற்றப்படும் நிலையில், நம் மாநிலத்தில் பெயரளவில் மட்டுமே இயற்கை விவசாயம் பின்பற்றப்படுகிறது. மேலும், நிதிநிலை அறிக்கையில் ஏக்கருக்கு ரூ. 4,000 ஊக்கத்தொகை வழங்குவதாகக் குறிப்பிட்டார். ஒரு விவசாயிக்கு எத்தனை ஏக்கர் நிலத்திற்கு ஊக்கத்தொகை வழங்குவீர்கள்?” என்று கேட்டார்.

தமிழகத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரிகளில், கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க.வின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram