சட்டப்பேரவையில் தற்போது தாக்கல்செய்யப்பட்டுவரும் விஜய் அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கையில், பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை வாசித்துவருகிறார்.
கல்வித் துறைக்கு ரூ. 44, 527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,393 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 3,734 பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 2,132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க ரூ. 7 கோடி; பொது நூலகங்களை மறுசீரமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள், மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வரும் 2031ஆம் ஆண்டிற்குள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.