முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

"அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது"

Staff Writer

"அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “வாக்கு திருட்டு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதோடு பல்வேறு ஆதரங்களையும் வெளியிட்டு வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது கூடாது. இதற்காகத்தான் நீதிமன்றம் சென்றுள்ளோம். மக்கள் மன்றத்தில் விளக்கிக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் சமயத்தில் கட்சியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பைத்தான் உங்களுக்கு கொடுப்போம். ஆனால், இந்த முறை மக்களின் வாக்குரிமையையும் பெற்றுத்தரும் பொறுப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறோம்.

எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவத்தை பார்க்கும் போது தலை சுற்றுகிறது. தமிழ்நாடு புலம்பி கொண்டிருக்கிறது. கேரளாவில் ஆளுங்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியும் ஒன்று சேர்ந்து எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட்டம் நடத்தி எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ஒன்று உள்ளது. அது எதிர்க்கட்சியாக இல்லை. இப்படியே சென்றுக் கொண்டிருந்தால் அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமில்ல உதிரி கட்சியாக கூட இருக்காது.

தங்களின் கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கின்ற நிலையில் உள்ளனர். எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியும் உச்சநீதிமன்றம் செல்கிறது. ஆனால், எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அதிமுக எஸ்.ஐ.ஆரை ஆதரித்து நீதிமன்றம் செல்கிறது, கூச்சமே இல்லாமல்.

கணக்கீட்டு பணியில் திமுகவினர் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும். கொளத்தூரில் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டதுதான். அதில் சந்தேகமே இல்லை.” என்றார்.