அ.தி.மு.க. தலைமை அலுவலகம் 
தமிழ் நாடு

அதிமுக விருப்ப மனு... கால அவகாசத்தை நீட்டித்த இபிஎஸ்!

Staff Writer

தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு பெற மேலும் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் 15.12.2025 முதல் 23.12.2025 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, 28.12.2025 – ஞாயிற்றுக் கிழமை முதல் 31.12.2025 – புதன் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.