பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக செயல்படுவதாக அக்கட்சியிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான பி. எச். மனோஜ் பாண்டியன் இன்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் பாண்டியன், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசும்போது, "இன்று திராவிடக் கொள்கையை பாதுகாக்கின்ற தலைவராகவும், தமிழக உரிமைக்காக போராட கூடிய தலைவராகவும், தமிழகத்தின் உரிமைகளை அடக்கு வைக்காத தலைவராகும் எவ்வளவு சோதனை வந்தாலும் முயற்சிகளைச் சிறப்பாக செய்யக்கூடிய தலைவராகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். சிந்தித்து தீர்க்கமாக முடிவுவின் அடிப்படையில் தான் தற்போது திமுகவில் இணைந்துள்ளேன். திராவிட கொள்கையை பாதுகாக்கும் தலைவரின் சிந்தனையை நிறைவேற்றவே இணைந்துள்ளேன்.
இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
வேறொரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படிதான் நடக்கின்ற துர்பாக்கியமான காலம்தான் தற்போது அதிமுகவில் இன்று இருக்கிறது. அதிமுக பாஜகவின் கிளை கழகமாக செயல்படுகிறது.
தன்னுடைய குடும்பத்திற்காக அதிமுக கட்சியையே அடகு வைத்துள்ள கட்சியுடன் இல்லாமல், கொள்கைக்காக உள்ள கட்சியுடன் இன்று நான் இணைந்துள்ளேன்.”என்றார்.