தமிழ் நாடு

உதயநிதி வீட்டுப் பெண்களை இழிவுசெய்வதா?- த.வெ.க. ஐடி விங்குக்கு பெண்கள் அமைப்பு கண்டனம்!

Staff Writer

உதயநிதியின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்வினை என்ற பெயரில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டு ஆபாசமான, பாலியல் வக்கிரம் நிறைந்த பதிவுகளை வெளியிட்டு வரும் த.வெ.க. இணையதளப் பிரிவினரின் செயல்பாடுகளும் கடும் கண்டனத்திற்கு உரியது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டித்துள்ளது.

அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் இராதிகா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கை:

”தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய விதம் தமிழக மக்களையும், குறிப்பாக பெண்களையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் மேடையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

இது வெறும் தரம் தாழ்ந்த பேச்சு மட்டுமல்ல. நமது சமூகத்தில் நூற்றாண்டுகளாக புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்க, அசமத்துவ குப்பையில் இருந்து வெளிப்படும் முடை நாற்றமெடுத்த சிந்தனையின் வெளிப்பாடாகும். பெண்களை ஒரு சமமான மனிதராக அல்லாமல், கேலிக்கும், பாலியல் நையாண்டிக்கும் உரிய பொருளாகக் கருதும் பிற்போக்குச் சிந்தனையின் அரசியல் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

அரசியல் என்பது கருத்துக்களாலும், கொள்கைகளாலும் மக்களை அணிதிரட்ட வேண்டிய களம். ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் மூலம் கைதட்டல் பெற முயல்வது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல் பண்பாட்டைப் போதிக்கிறது. தலைவர்களே பெண்களை இழிவுபடுத்தும் மொழியைப் பயன்படுத்தும்போது, அவர்களைப் பின்பற்றும் தொண்டர்கள் பெண்களை சமமான மனிதர்களாக மதிக்கும் பண்பை எவ்வாறு வளர்த்துக் கொள்வார்கள்? பெண்களை அவமதிப்பதும், பாலியல் ரீதியாக கேலி செய்வதும் அரசியல் கலாச்சாரமாக மாறிவிடும் அபாயம் இல்லையா?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், இணையவழி அவதூறுகள், பொது இடங்களில் பாலின அடிப்படையிலான இழிவுகள் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அரசியல் தலைவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் பேச வேண்டியது அவசியம். மாறாக, இத்தகைய பேச்சுகள் பெண்களுக்கு எதிரான வன்முறை மனநிலைக்கு சமூக அங்கீகாரம் வழங்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.எனவே இதை சாதாரண அரசியல் சர்ச்சையாகக் கடந்து செல்ல முடியாது.

திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக பெண்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெண்களை மதிக்கும் ஜனநாயக, சமத்துவ, பாலின நீதி சார்ந்த அரசியல் பண்பாட்டை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பெண்களை இழிவுபடுத்தும் இந்த அருவருக்கத்தக்க பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய பேச்சுக்களை யார் பேசினாலும், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தந்த அரசியல் கட்சிகள் மௌனம் காக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட தலைவரை வெளிப்படையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய பேச்சுகள் மீண்டும் நிகழக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து, உரிய ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் பேச்சுகளை அரசியல் கலாச்சாரமாக கருதி எந்தக் கட்சியும் அனுமதிக்கக் கூடாது.

அதேவேளையில், திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்வினை என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டு ஆபாசமான, பாலியல் வக்கிரம் நிறைந்த பதிவுகளை வெளியிட்டு வரும் தமிழக வெற்றி கழகத்தின் இணையதள பிரிவின் செயல்பாடுகளும் கடும் கண்டனத்திற்கு உரியது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெண்களை மதிக்கும் ஜனநாயக, சமத்துவ, பாலின சமத்துவம் சார்ந்த அரசியல் பண்பாட்டை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று அ.ராதிகாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.