தமிழ் நாடு

மே தினக் கொடி- தடுக்கவிடக் கூடாது: தேர்தல் அதிகாரிக்குக் கடிதம்

Staff Writer

தேர்தல் நடைமுறைகள் காரணமாக வரும் மே நாளன்று கொடியேற்றுவதற்கும் மரங்களை நடுவதற்கும் தடுக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் ம.இராதாகிருஷ்ணன், சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அதில், “ வாக்குப்பதிவுக்கு முன்னும் பின்னம் பல மதங்களின் திருவிழாக்கள், பண்பாடு, சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அரசு அதிகாரிகளோ தொழிற்சங்கங்களை மட்டும் அரசியல் கட்சிகளைப் போலவே பார்க்கிறார்கள். இதனால் தொழிற்சங்கங்கள் அனுமதி கோரினாலும்கூட மறுக்கும் போக்கு பல அதிகாரிகளிடம் உள்ளது.

கொடி மரங்கள் எல்லாம் தேர்தலுக்காக அகற்றப்பட்டுள்ளன. கொடியேற்றுவதற்காக அவற்றை மீண்டும் நடவேண்டியுள்ளது. அதைத் தடுப்பதோ கொடியேற்றியதும் கொடிமரத்தை அகற்ற நிர்பந்தம் செய்வதோ சரியானதாக இருக்கமுடியாது. மே 1 அன்று தமிழகத்தில் தேர்தல் முடிந்த காலம் என்பதால், பிரச்சாரத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

எனவே, கொடி மரங்களை நடவும் கொடியேற்றவும் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களை நடத்தவும் தொழிற்சங்கங்களை அனுமதிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும்; ஊடகங்கள் மூலம் அதை வெளிப்படுத்த வேண்டும்.” என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.