தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என விஜய் அரசை தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
விஜய் அரசை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
”ஆவடி, தாம்பரம், வேலூர், ஓசூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை PPP (Public Private Partnership) முறையில் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்தை நியமிக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகள் என்பது இலாப நோக்கமற்ற அத்தியாவசிய பொதுச் சேவையாகும். நகரங்களின் சுகாதாரம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய இப்பணிகளை தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கு உட்படுத்துவது பொதுநலனுக்கும் தொழிலாளர் நலனுக்கும் எதிரானதாகும்.
கடந்த காலங்களில் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் PPP உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தூய்மைப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட அனுபவம் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம், வேலைப் பாதுகாப்பின்மை, சமூகப் பாதுகாப்பு மறுப்பு மற்றும் தொழிற்சங்க உரிமை மீறல்களை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. எனவே தற்போதைய PPP முயற்சியும் அதே பாதையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.
பொதுச் சேவைகளை வலுப்படுத்த வேண்டிய அரசு, அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பாதையில் செல்வது தனது சமூகப் பொறுப்பிலிருந்து விலகுவதாகும். எனவே திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை PPP முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
அதே நேரத்தில் தற்போது ஒப்பந்தம், அவுட்சோர்சிங், தினக்கூலி, சுய உதவிக்குழு அல்லது வேறு எந்த பெயரில் பணியாற்றி வந்தாலும், தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் தமிழ்நாட்டின் பணி நிரந்தரச் சட்டத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக நிரந்தரப் பணிகளை நிரந்தரமற்ற தொழிலாளர்களைக் கொண்டு நடத்துவது சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் முரணானதாகும்.
மேலும், உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 2017 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பதோடு, அதன் பின்னர் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய காலமுறை திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தற்போதைய விலைவாசி மற்றும் குடும்ப வாழ்வாதாரச் செலவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக புதிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவான ஊதியம் வழங்குவது வெறும் நிர்வாகக் குறைபாடு அல்ல; அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணிகளில் இத்தகைய சட்ட மீறல்கள் நீண்டகாலமாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க வேண்டிய நிர்வாகங்களும், அமலாக்க அமைப்புகளும், ஆய்வு அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியிருப்பது மிகுந்த கவலைக்குரியதாகும்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களும், அவற்றை அமல்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் சட்ட மீறல்களைத் தடுக்கத் தவறினால், அது சட்டத்தின் நோக்கத்தையே அர்த்தமற்றதாக மாற்றிவிடும். எனவே குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறும் ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் மற்றும் பொறுப்புடைய நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய உரிமையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், தூய்மைப் பணிகளை PPP முறையில் தனியார்மயமாக்குவது குறித்து ஆலோசனை வழங்கும் எந்தக் குழுவும், எந்த அதிகாரியும் முதலில் தற்போதைய தூய்மைப் பணியாளர்களின் வேலைப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் மனிதக் கண்ணியத்தை எவ்வாறு உறுதி செய்யப் போகிறார்கள் என்பதற்கு பதிலளிக்க வேண்டும். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவிட்டு தனியார்மயத் திட்டங்களை முன்னெடுப்பது சமூக நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே எதிரானதாகும்.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தலைமுறைகளாக ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியை ஒப்பந்தமயமாக்கி, நிரந்தர வேலைவாய்ப்பை மறுத்து, பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தும் கொள்கைகள் சமூக நீதியின் நோக்கங்களையே மறுக்கும் செயலாகும். மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் இந்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியது ஒப்பந்த வேலை அல்ல; கண்ணியமான நிரந்தர வேலை, வாழ்வாதார ஊதியம் மற்றும் முழுமையான சமூகப் பாதுகாப்பாகும்.
தூய்மைப் பணியாளர்களின் உழைப்பின் மீது தான் நமது நகரங்கள் இயங்குகின்றன. நகரங்களின் சுகாதாரத்தையும் மக்களின் வாழ்வையும் பாதுகாக்கும் இந்த தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக அல்ல, உள்ளாட்சி நிர்வாகத்தின் நிரந்தர ஊழியர்களாக அங்கீகரிப்பதே நாகரிகமான சமூகத்தின் அடையாளமாகும்.
எனவே தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு அரசு கைவிட்டு, அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம், வாழ்வாதார ஊதியம், சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.” என்று தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.