விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று காலை புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஜித் பவார், விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அஜித் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் அஜித் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
முன்னதாக பாராமதியில் உள்ள அஜித் பவாரின் இல்லத்தில் இருந்து வித்யா பிரதிஸ்தான் திடலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட அவரின் உடலுக்கு சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, நேற்று விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காலை 8.43 மணிக்குப் பிறகு என்ன நடந்தது? என்பது கருப்புப் பெட்டி உரையாடல் மூலம் கண்டுபிடிக்கப்படும். அதன்மூலம், விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.