102 நாள்களுக்குப் பிறகு ஆகாசின் உடல் தகனம் செய்யப்பட்டது. 
தமிழ் நாடு

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் உடல்!

Staff Writer

போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் என்ற இளைஞர் இறந்த நிலையில், 100 நாள்களுக்குப் பிறகு கோட்டாட்சியர் முன்னிலையில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆகாஸ் டெலிசன், வயது 24. அரிவாள் வெட்டு தொடர்பான வழக்கில் போலீசார் இவரை கைது செய்தனர். போலீசார் அடித்ததில் கால் முறிந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது மார்ச் மாதம் மருத்துவமனையிலேயே இறந்துபோனார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆகாசின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். மேலும், ஆகாசின் தந்தை இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் முறையாக விசாரிக்கும்படி உத்தரவிட்டது.

உறவினர்களின் கோரிக்கை நிறைவேறாததால், உடலை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், 100 நாள்களாக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் அவரது உடல் பாதுகாக்கப்பட்டு வந்தது.

நீதிபதி விக்டோரியா கவுரி, உடலைப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். ஆனால், உறவினர்கள் உடலை வாங்க முன்வரவில்லை.

இதனால், நீண்டநாளாக பிணவறையில் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உருவாகும் என்றும், உடலின் பெரும்பகுதி ஏற்கனவே சிதைந்து விட்டதால் அரசே ஆகாசின் உடலை அடக்கம் செய்யும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

உரிமை கோரப்படாத உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டியது அரசின் கடமை என்று நீதிபதி தெரிவித்தார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உதவும் வகையில் அவரின் உடலை தகனம் செய்வதற்கு முன்னர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த உத்தரவையடுத்து, இன்று 102 நாள்களுக்குப் பிறகு மதுரை, தத்தனேரி மயானத்தில் பலத்த பாதுகாப்புடன் கோட்டாட்சியர் கருணாகரன் முன்னிலையில் ஆகாசின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram