தமிழ் நாடு

வரிசை கட்டி வந்த கூட்டணி கட்சி தலைவர்கள்… பியூஸ் கோயலின் பிஸி சந்திப்புகள்!

Staff Writer

சென்னையில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பாமக தலைவர் அன்புமணி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் சந்தித்து பேசினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணியில் பிற கட்சிகளை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சென்னையில் பியூஷ் கோயல் முகாமிட்டுள்ளார். சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று காலை பியூஷ் கோயலை சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதிமுகவின் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் பியூஷ் கோயலுடன் மதுராந்தகம் திடலை பார்வையிட்டனர்.

மேலும் பியூஷ் கோயலை நேற்று இரவு இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல, ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியில் இணைந்த பாமக தலைவர் அன்புமணி, பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பின்னர், பியூஷ் கோயலை அன்புமணி முதல் முறையாக சந்தித்து பேசினார்.