மதுக்கடைகள் 
தமிழ் நாடு

கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அனுமதி; மது பெருகவே வழிவகுக்கும் - அன்புமணி

Staff Writer

கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்குவது ஆபத்தானது என்றும், தனியார்மயம், மது வணிகம் அதிகரிக்கவும் வழி வகுக்கக்கூடாது என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாட்டில் சில்லரை மது வணிகத்தை டாஸ்மாக் நிறுவனம் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களும் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் விரும்பினால் டாஸ்மாக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப மதுக்கடைகளைத் திறந்துகொள்ளலாம்; அவ்வாறு திறக்கப்படும் மதுக்கடைகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு ஆபத்தானது. மது அத்தியாவசியமான பொருள் அல்ல. தமிழ்நாட்டில் தேவைக்கும் அதிகமாகவே மதுக்கடைகள் உள்ளன என்பதால், புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று சில நாள்களுக்கு முன்பு தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்திருந்தது. அதற்குள்ளாக கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?

கடந்த 2002-03ஆம் ஆண்டில் மது வணிகம் முழுக்க முழுக்க அரசுடைமையாக்கப்படுவதற்கு முன்பாக தனியாரும், கூட்டுறவு சங்கங்களும் தான் மதுக்கடைகளை நடத்தின. அப்போது அவற்றில் சட்டவிரோதமாக மது வணிகம் செய்யப்பட்டது, ஓர் இடத்தில் உரிமம் பெற்றுக்கொண்டு, இப்போது செயல்படும் சந்துக்கடைகளைப் போல பல இடங்களில் கிளைகள் திறந்து மது விற்பனை செய்யப்பட்டது, மதுக்கடைகளிலேயே கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்பட்டது உட்பட்ட காரணங்களால்தான் தனியார் மதுக்கடைகள் மூடப்பட்டு 2002 - 03ஆம் ஆண்டில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால், அந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, இப்போது கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அரசு அனுமதித்தால் இது இத்துடன் நிற்காது. அடுத்தக்கட்டமாக தனியாரும் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்கப்படும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும். சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாகத்தான் அவற்றின் எண்ணிக்கை இப்போது 4048 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மதுக்கடை வணிக நேரமும் 16 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக முழு மதுவிலக்கை நோக்கித் தான் அரசு பயணிக்க வேண்டுமே தவிர மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படக் கூடாது.

எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதுக்கடைகளை நடத்த அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram