தமிழ் நாடு

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம்… ஸ்டாலின் கண்டனம்!

Staff Writer

மத்திய அரசு அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்துள்ள ‘திருநர் (உரிமைகள் மற்றும்பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026’-க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த மார்ச் 13ஆம் தேதி மக்களவையில் இந்தத் திருத்தச் சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்கள் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் அந்தச் சமூகத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து இன்று (மார்ச் 25) முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பதிவில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,“திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் – 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அந்தச் சட்டம் யாருடைய உரிமைகளையும் வாழ்க்கையையும் பாதிக்கப்போகிறதோ, அந்த மக்களின் கருத்துகளைக் கேட்காமல் வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முடியாது.

பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை அச்சமூகமே எதிர்க்கும்போது, அவர்களுடன் கலந்துரையாடி கருத்துகளைக் கேட்க வேண்டும். அந்தச் சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, அது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

மத்திய பாஜக அரசு இந்தத் திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்பாக, அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். திருநங்கைகளுடன் முறையான ஆலோசனைகளை நடத்தி, அவர்களிடையே உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

திருநங்கை அடையாளத்தைப் பெறுவதற்கு மருத்துவக் குழுவின் சான்றிதழ் கட்டாயம் என்பது உள்ளிட்ட சில புதிய விதிகள், உச்ச நீதிமன்றத்தின் ‘நல்சா’ தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும், இது திருநங்கைகளின் கண்ணியத்தைச் சிதைப்பதாகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வரின் இந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.