அமித்ஷாவுடன் சந்திப்பு 
தமிழ் நாடு

டெல்லியில் அமித்ஷா – எடப்பாடி திடீர் சந்திப்பு! நடந்தது என்ன?

Staff Writer

புதுடெல்லிக்குச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்தார். நேற்று இரவு ஒன்பது மணி அளவில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியேறிய எடப்பாடி, ஊடகங்களில் யாரையும் சந்திக்கவில்லை. முன்னதாக அதிமுக நிர்வாகிகள் பலருடன் இணைந்து அமித்ஷாவுடன் பேசிய எடப்பாடியார், அவர்களை அனுப்பிவிட்டு தனியாக சற்று நேரம் பேசியதாகத் தெரிவிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து இன்று எக்ஸ் தளத்தில்  ‘மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான வழங்கிட வேண்டும் என  அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்’’என்று மட்டும் கூறி உள்ளார்.

புதிய துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்று உள்ள சிபி ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்து அதிமுக சார்பில் வாழ்த்துத்தெரிவித்தார் பழனிச்சாமி.

சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தபோது

டெல்லி சென்றிருந்த எடப்பாடியார் தாஜ் மான்சிங் என்ற நட்சத்திர விடுதியில் தங்கினார். அவருடன் எஸ்.பி வேலுமணி, தங்கதுரை, சிவி சண்முகம், கேபி முனுசாமி போன்ற அதிமுக நிர்வாகிகளும் இந்த சந்திப்புகள் உடனிருந்தனர்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி விலகியதற்கு பாஜகவின் டெல்லி தலைமையின் ஆதரவு காரணம் என்று கூறப்படும் நிலையில் எடப்பாடியார் அமித்ஷாவைச் சந்தித்திருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. எடப்பாடியார் ‘முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வேண்டுகோள் வைத்தேன்’ என்பதோடு முடித்துக்கொண்டாலும் வரும் நாட்களில் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியில் நிகழவிருக்கும் மாறுதல்கள் என்ன நடந்தது என்பதைப் புலப்படுத்தும். இருப்பினும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் முதலியோர் மட்டுமல்லாமல், மேலும் பல சிறிய கட்சிகளைக் கொண்ட பலமான கூட்டணியையே அதிமுகவுடன் உருவாக்க டெல்லி தலைமை விருப்பம் கொண்டிருப்பதாகவும் அதுவே வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.