அன்புமணி - ஸ்டாலின் 
தமிழ் நாடு

சம ஊதியம் கேட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தமா?- அன்புமணி கண்டனம்

Staff Writer

”சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 35 நாள்களாக போராடி வரும் இடைநிலை  சிரியர்களின் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்திருக்கிறது. பல ஆசிரியர்களின் ஊதியத்தில்  80% வரை பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநீதியைக் களையக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் அநீதி இழைப்பது கண்டிக்கத்தக்கது.” என்று பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி கூறியுள்ளார். 



இதுகுறித்து அவர் இன்று தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள கருத்து:

“ கடந்த 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே   அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170   ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு  ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்த திமுக அரசே இந்த அநீதியைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு நீதி வழங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால்,  ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில்  அவர்களின் கோரிக்கையை  நிறைவேற்றியிருக்க வேண்டும். அவ்வாறு நிறைவேற்றியிருந்தால்  அவர்கள் போராட வேண்டியிருந்திருக்காது. அவர்களின்  ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு காரணமே திமுக அரசு தான் எனும் போது ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது செய்யாத தவறுக்கு இரட்டை தண்டனை வழங்குவதற்கு ஒப்பானது ஆகும்.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி  (எண். 311) அளித்த திமுக, ‘’பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும் (வாக்குறுதி எண் - 312)” என்ற வாக்குறுதியையும் அளித்தது. பழிவாங்கலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இப்போது ஆசிரியர்களை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போராட வைப்பதும், போராடியதற்காக தண்டிப்பதும்  ஏற்க முடியாதவை. எனவே,  35-ஆம் நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை  முழுமையாக நிறைவேற்றுவதுடன், அவர்கள்இடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தையும் உடனடியாக  வழங்க வேண்டும்.” என்றும் அன்புமணி  கூறியுள்ளார்.