சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன; அரசுத் துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் நீண்ட காலமாக உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“ திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பதால், மின்சார வாரியத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நடந்த சதியாக இருக்கக்கூடும் என்று ஐயங்கள் எழுந்துள்ளன.
மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக கூறப்படும் போதிலும், இதுவரை 8 ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 அரசு அலுவலகங்களை பட்டியலிட்டால் அதில் மின்சார வாரியத் தலைமை அலுவலகமும் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும், தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடைபெறும் துறைகளில் மின் துறை மிகவும் முக்கியமானது. அதனால் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்யப்பட்டதா? ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன் என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.