மின்சார வாரியம் 
தமிழ் நாடு

மின்வாரியத்தில் 80 கேங்மேன்கள் பலி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்

Staff Writer

மின்சாரம் தாக்கி 80-க்கும் மேற்பட்ட கேங்மேன் உயிரிழந்துள்ளனர்; 200-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று பா.ம.க.  தலைவர் அன்புமணி அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். 

மின்சார வாரியத்தில் அண்மையில் பேசப்பட்டுவரும் பிரச்னைகளைக் குறிப்பிட்டுள்ள அவர், ”தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை  எடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில்,  காலியாக உள்ள கள உதவியாளர்கள், வயர்மேன் ஆகிய பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும் என்ற கேங்மேன்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது  என்றாலும் கூட, அதை  ஆய்வு செய்ய மின்வாரியம் முன்வராதது கண்டிக்கத்தக்கது.” என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

மேலும், ”தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நீண்டகாலமாக களப்பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தான்  கேங்மேன் எனப்படும் கடைநிலை தொழில்நுட்பப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற 9613  பேர் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் பணியில் நியமிக்கப்பட்டனர்.

இரு வருடப் பயிற்சிக்குப் பிறகு ரூ.16,200 - ரூ.51500 ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்ட அவர்கள், கேங்மேன் பணிக்கான  வேலைகளைக் கடந்து  மின் தடை நீக்குதல், தாழ்வழுத்த மின் தடை நீக்குதல்,  மின்மாற்றிகள் பராமரிப்பு, மின் கணக்கீடு செய்தல் உள்ளிட்ட கள உதவியாளர்கள், வயர்மேன் செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர். இந்தப் பணிகளை செய்யும் போது  மின்சாரம் தாக்கி 80-க்கும் மேற்பட்ட கேங்மேன் உயிரிழந்துள்ளனர்; 200-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

கேங்மேன் என்ற பெயரில் இவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தாலும் கூட வயர்மேன், கள உதவியாளர் பணிகளையும் இவர்கள் தான் செய்து வருகின்றனர். இத்தகைய நிலையில்  காலியாக உள்ள 26,605 கள உதவியாளர்கள், 14,358 வயர்மேன் பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் போது, இப்போது பணியில் உள்ள கேங்மேன்களை அந்த பணிகளில் நியமித்து விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் புதிதாக ஆள்களை தேர்வு செய்யலாம் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது தான்.

கேங்மேன்களாக பணியாற்றி வருபவர்கள் வயர்மேன், கள உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதியையும், பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர்  தேவையான கல்வித் தகுதியையும் கடந்து பட்டப்படிப்பு, முனைவர் ஆராய்ச்சிப் பட்டம் வரையிலான  படிப்புகளையும் முடித்துள்ளனர். கேங்மேன்களை அடுத்தக்கட்ட பணிகளுக்கு நியமிப்பது குறித்து மின்வாரியம் ஆய்வு  செய்யலாம் என்று நீதிமன்றங்களும்,  தொழிலாளர் நல அமைப்புகளும் பரிந்துரைத்துள்ளன. ஆனால், மின்வாரியம் மட்டும் இவற்றையெல்லாம் செவிமடுக்க மறுக்கிறது.

மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் கேங்மேன்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து 500 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணி செய்ய வேண்டியிருப்பதே அவர்களுக்கு பெரும் தண்டனையாகும்.  இந்த  தண்டனையிலிருந்து கேங்மேன்களை மீட்கவும், அவர்களின் தகுதிக்கேற்ற பணியும், ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்களை வயர்மேன், கள உதவியாளர் பணிகளில் அமர்த்த  அரசு முன்வர வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.