டி.என்.பி.எஸ்.சி தேர்வு குளறுபடியில் தேர்வு அதிகாரி மாற்றப்பட்டாரா, இல்லையா? தமிழக மக்களை முட்டாள்களாக ஆக்க திமுக அரசு முயலக்கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கடுமையாகக் கூறியுள்ளார்.
”தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு தொகுதி 2 நிலை அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக கடந்த 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த போட்டித்தேர்வுகள் குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால், அந்த அதிகாரி இன்னும் பணியில் தொடர்வதற்கு திமுக அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.” என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
நுழைவுச் சீட்டுகளை வழங்குவதில் நடந்த குளறுபடிகளால் தேர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் 18 ஆயிரம் தேர்வர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
”டி.என்.பி.எஸ்.சியின் அடிமட்ட பணியாளர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தால் கூட மிகவும் செம்மையாக நடத்தி முடித்திருப்பார்கள். ஆனால், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 3 பேரின் கண்காணிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டித் தேர்வு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அனைத்து மட்டங்களிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்த அ.சண்முகசுந்தரம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருப்பதாகவும், அவருக்கு பதில் புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் செயலாளராக பணியாற்றி வந்த வெங்கடப்பிரியா நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பிலிருந்தே அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அனைத்து ஊடகங்களிலும் இது குறித்து விரிவாக செய்திகள் வெளியிடப்பட்டன. தொகுதி 2 தேர்வுகளை நடத்துவதில் நடந்த குளறுபடிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், குறைந்த பட்சம் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே என்று பொதுமக்களும், தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட தேர்வர்களும் மனநிறைவு அடைந்திருந்தனர்.
ஆனால், நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் அ.சண்முக சுந்தரம் தொடர்ந்து தேர்வாணையத்திற்கு வந்து, தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குரிய பணிகளைச் செய்து வருகிறார். இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதி 2 பணிகளுக்கான பொது அறிவுத் தாள் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு கூட நேற்று மாலை அ.சண்முக சுந்தரம் பெயரில் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஒருவேளை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், அதுகுறித்து அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்திகளை அரசு மறுக்காதது ஏன்? என்பது குறித்து திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தொகுதி 2 தேர்வு குளறுபடிகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; தவறு செய்த அனைத்து அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.” என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.