டயாலிசிஸ் 
தமிழ் நாடு

தமிழ்நாட்டில் 4.3% பேருக்கு சிறுநீரக பாதிப்பு- 500 டயாலிசிஸ் மையங்கள் வேண்டும்!

Staff Writer

”சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரின் தேசிய சராசரி 3.20% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 4.30 விழுக்காட்டினர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் சிறுநீரக பாதிப்பு நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.” என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கூறியுள்ளார்.

இன்றைய அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது:

”இந்தியாவில் சிறுநீரக நோய் மற்றும் செயலிழப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தெலுங்கானா, கோவா,  ஒதிஷா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.


தமிழ்நாட்டில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 8.40 விழுக்காட்டினருக்கு சிறுநீரக செயலிழப்பு மூன்றாம் நிலைக்கும் கூடுதலாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 6.90 விழுக்காட்டினர் மூன்றாம் நிலை பாதிப்பிலும், 1.2 விழுக்காட்டினர் நான்காம் நிலை பாதிப்பிலும், 0.30 விழுக்காட்டினர் ஐந்தாம் நிலை பாதிப்பிலும் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை பாதிப்பில் உள்ளவர்களுக்கு சிறுநீரகச் செயல்பாடு  50%க்கும் குறைவாக இருக்கும்; ஐந்தாம் நிலை பாதிப்பில் இருப்பவர்களின் சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்து விடும் என்றும் சிறுநீரக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் கவலையளிக்கும் நிலைமையாகும்.

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், நீரிழிவு நோயாளிகளில் 40 விழுக்காட்டினர் கடுமையாக சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன், அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், உணவில் ஒரு நாளைக்கு 10 கிராமுக்கும் கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை சிறுநீரக பாதிப்புக்கு முதன்மைக் காரணங்களாக திகழ்கின்றன. இரவு நேரங்களில் பிரியாணி மற்றும் ஃபிரைட் ரைஸ் போன்ற துரித உணவு வகைகளை உட்கொள்ளுதல்,  தெருவோர உணவகங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளை  உட்கொள்ளுதல் போன்றவையும் சிறுநீரகங்களுக்கு தேவைக்கு அதிகமான சுமையைக் கொடுப்பதால் அவை  விரைவிலேயே செயலிழந்து விடுவதாக தேசிய, மாநில அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பட்டியலிட்டு மாளாது. குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர் பாதிக்கப்பட்டால், அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றிலுமாக தடைபட்டு விடும். அடுத்ததாக, பாதிக்கப்பட்டவருக்கு பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இரு நாள்களுக்கு ஒரு முறை முதல் வாரத்திற்கு மூன்று முறை வரை டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அதற்குத் தேவையான அளவில் டயாலிசிஸ் சேவை மையங்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படவில்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், வட்டம் சாராத  மருத்துவமனைகள், நகர்ப்புற சமுதாய  சுகாதார மையங்கள் என 146 அரசு மருத்துவமனைகளில், 1,395 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் வாயிலாக 2025&26ஆம் ஆண்டில் 9,471 பேர் மட்டும் தான் பயனடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இந்த அளவுக்கு மட்டுமே டயாலிசிஸ் செய்யப்படுவது போதுமானதல்ல.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பான்மையினர் தனியார் மருத்துவமனைகளில் தான் பணம் செலுத்தி டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக ஓர் அமர்வுக்கு ரூ.2000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.3&4 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். இது ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து வாடும் குடும்பங்களை மீள முடியாத கடன்சுமையில் தள்ளிவிடும் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவம் அளிக்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தி விடும். இவற்றில் எந்த நிலையும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.

சிறுநீரக செயலிழப்பைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் சேவை வழங்கி அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் இரு வகையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். முதலாவது, சிறுநீரக செயலிழப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (FSSAI - Food Safety and Standards Authority of India வாயிலாக ஆய்வுகளை நடத்தி சிறுநீரகப் பாதிப்புக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வழிவகுக்கும் உணவுகளின் வணிகத்தையும், பயன்பாட்டையும் தடை செய்தல் ஆகும். இவை மிகவும் அவசரமான, அவசியமான நடவடிக்கைகள் ஆகும்.

இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவசமாக டயாலிசிஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்யும்  வகையில் அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சேவை வழங்கும் கட்டமைப்பை விரிவுபடுத்துவது ஆகும். இன்றைய நிலையில் 146 மருத்துவமனைகளில் மட்டும் டயாலிசிஸ் சேவை வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் மையங்களை அரசு & தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இவை அனைத்தையும் சேர்த்து முதற்கட்டமாக மொத்தம் 500 அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சேவை மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்(36), மாவட்டத் தலைமை மருத்துவமனைகள்(37), வட்ட மருத்துவமனைகள் (199), வட்டம் சாராத  மருத்துவமனைகள் (59),  நகர்ப்புற சமுதாய  சுகாதார மையங்கள் (39) ஆகிய அனைத்திலும் டயாலிசிஸ் சேவை மையங்கள் செயல்படுவது உறுதி செய்யப்பட்டால், அவற்றின் எண்ணிக்கை 370 ஆக உயரும். அத்துடன் கிராமப்புறங்களில் உள்ள 130 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டயாலிசிஸ் சேவை மையங்களை அமைத்தால் மொத்த எண்ணிக்கை 500 ஆக உயரும். ஏற்கனவே அமைக்கப்பட்ட 196 மையங்கள் தவிர புதிதாக 304 மையங்களை அமைக்க, அனைத்து செலவுகளையும் சேர்த்து ரூ.608 கோடி மட்டுமே தேவைப்படும் என்பதால் இதை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும். இவை தவிர தேவையான இடங்களில் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் குறைந்தது ஒரு டயாலிசிஸ் எந்திரமாவது அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.