போராட்டம் நடத்திவரும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த அன்புமணி 
தமிழ் நாடு

500+ ஊராட்சிச் செயலாளர்கள் இடைநீக்கம் - ஸ்டாலின் அரசாங்கம் தப்புக்கணக்கு

Staff Writer

”தமிழ்நாட்டில் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராடிய ஊராட்சி செயலாளர்களுக்கு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் துரோகம் செய்த திமுக அரசு, அவர்களை பழிவாங்கும் செயல்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. நீதி கேட்டு போராடியவர்களுக்கு அநீதியைப் பரிசளிப்பது கண்டிக்கத்தக்கது.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கடுமையாகச் சாடியுள்ளார்.

அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர், “தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக  நியமிக்கப்பட்ட அவர்கள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணி நிலைப்பு செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்; இதற்காக தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி ஆறாம் நாள் முதல் தொடர் விடுப்பு எடுத்ததுடன், சென்னையில் குவிந்து காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர்.

ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால், அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் 11&ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத்  தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. அதை நம்பி 8 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஜனவரி 13&ஆம் தேதி ஊராட்சி செயலர்கள் அறிவித்தனர்.

ஆனால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆகியோருக்கான ஓய்வூதியத்தை  ரூ.2000&இலிருந்து ரூ.3400 ஆக உயர்த்தியதைப் போலவே ஊராட்சி செயலாளர்களுக்கும் உயர்த்தியது. இதன் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதையும் உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4&ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 12&ஆம் நாளாக இன்றும் போராட்டம் தொடரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசுவதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மாறாக, உரிமைக்காக போராடுபவர்களை அடக்குமுறைகள் மூலம் பணியவைத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.” என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “உரிமை கேட்டு போராடுவதற்காக 500&க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ள திமுக அரசு, மேலும் 600&க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. ஆனால், இந்த பழிவாங்கலைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.

ஊராட்சி செயலாளர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கும் ஒரே அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல், அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக ஓய்வூதியம் வழங்குவது தான் நியாயமானதாக இருக்கும். பதிவுறு எழுத்தர்களுக்கு  அவர்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில்  அரசு ஊழியர்களுக்கு  வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பதும், அதே  ஓய்வூதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுடன்  சேர்த்து ரூ.3400 மட்டும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பதும் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

ஊரக உள்ளாட்சிகளின் முதுகெலும்பாக  திகழ்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள் தான். அதிலும் குறிப்பாக  தமிழகத்தின்  28 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் ஊராட்சி செயலாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். கடந்த 12 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் அவர்களை பணிய வைக்க திமுக அரசு முயல்வது தவறு; இது பயனளிக்காது.

எனவே, திமுக அரசு பழிவாங்கும் போக்கை கைவிட்டு, ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தகுதிக்கேற்ற  உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.