தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து அவருடைய நடவடிக்கை என்ன என்பது பெரும் கேள்வியாகி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் சார்பில் முக்கிய தலைவர்கள் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்துவந்தனர். குறிப்பாக, அண்ணாமலை எங்கே ஆளையே காணோம் என்கிற அளவுக்குதான் நிலவரம் இருந்தது.
இந்நிலையில் திடீரென சில நாள்களாகவே அவர் பா.ஜ.க.விலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கப் போகிறார் என்றும் பரபரப்புத் தகவல்கள் வந்தன.
இப்படியான சூழலில்தான் அண்ணாமலையின் புதிய கட்சிக்கு தமிழக மக்கள் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது என்றும் அக்கட்சியின் கொடியானது காவி, சிவப்பு, பச்சை என அடுத்தடுத்து இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்தகட்டப் பரபரப்புத் தகவல் வந்துள்ளது.
மக்கள், தேசம், தர்மம் ஆகியவை அக்கட்சியின் முழக்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள சூழலில், அவர், தங்களுக்கும் தி.மு.க.வுக்கும்தான் போட்டி என திருச்சியில் பேசுகையில் மீண்டும் கூறியுள்ளார்.
இதைப்போலவே, அண்ணாமலையின் புதிய கட்சியான டிஎம்கே உருவானபிறகு, டிவிகேவுக்கும் இந்த டிஎம்கேவுக்கும்தான் போட்டி என உருவாகும் என்கிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள்.
அதாவது, தி.மு.க. எனும் டிஎம்கே அல்ல த.ம.க. எனும் டிஎம்கேவை முன்னிலைப்படுத்துவது என திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
ஜோசப் விஜய் குறித்து பா.ஜ.க. தரப்பில் காட்டமான விமர்சனம் வைக்கப்படும் நிலையில், பா.ஜ.க. தலைமை நேரடியாக அக்கட்சியுடன் மோதாமல், அண்ணாமலையின் கரத்தை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
புதிய தலைமுறை இளைஞர்களிடையே காணப்படும் திராவிடக் கட்சிகள் மீதான அதிருப்தியை அறுவடை செய்ய அண்ணாமலையின் இந்தப் புது அவதாரத்துக்கு சங் பரிவார் ஆதரவு இருப்பதாக நம்பகமான தரப்புகள் தெரிவிக்கின்றன.
இத்துடன், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான நாராயணன் திருப்பதி, “எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.” என்று தன் சமூக ஊடகப் பக்கங்களில் பூடகமாகக் குறிப்பிட்டிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.
கத்தரி முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்!