விஜய்யுடன் விராலிமலை விஜயபாஸ்கர் 
தமிழ் நாடு

விடமாட்டேன் என்றது இதுதானா விஜய்?- அறப்போர் இயக்கம் கேள்வி!

Staff Writer

பார்ட்டி பண்டு விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் பார்ட்டி பண்டு வாங்கினார் என்று அறப்போர் இயக்கம் சாடியுள்ளது.

விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.

இந்த நிலையில் அறப்போர் இயக்கம் இதை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது.

”சிபிஐ விஜய்பாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

சேகர் ரெட்டியின் எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்திடமிருந்து மட்டும் விஜயபாஸ்கர் ரூ.85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித் துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

தொட்டவர்களை விடமாட்டேன் என்பது இதுதானா முதலமைச்சர் விஜய்? ” என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.