டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட அரிட்டாபட்டியில் உள்ள படுகை பெளத்தப் படுகையா, சமணப் படுகையா, பஞ்ச பாண்டவர் படுகையா என விவாதம் எழுந்துள்ளது.
மதுரையில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க மைய அரசு அனுமதி அளித்துள்ள பகுதியில் தொல்லியல் மதிப்புவாய்ந்த இந்தப் படுகை குறித்து பல தரப்பினரும் பாதுகாக்கக் குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில், அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் வாசித்த தீர்மானம் உட்பட பல தரப்பினர் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்திருப்பது, இதுகுறித்து பரவலான விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன், நேற்று அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது அவர், “டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது குடவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி வட்டெழுத்துகள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகும்.” என்று குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய வி.சி.க. உறுப்பினர் சிந்தனைச்செல்வன், “அந்தப் பகுதியில் ஒரு சமணப்படுகை உள்ளது. அந்த சமணப்படுகை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது ஒரு குறித்து கல்வெட்டு உள்ளது. அந்த கல்வெட்டில், நெல்வெளிஈய், சிழிவன், அதினன், வெளியன் ஆகியோர் அந்த சமணப்படுகையை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றுத் தரவு உள்ளது. நமது தீர்மானத்தில் சமணப்படுகை என்ற வார்த்தைக்கு பதிலாக பஞ்சபாண்டவர் படுகை என்ற சொல் உள்ளது. ஆகவே பஞ்சபாண்டவர் என்ற சொல்லுக்குப் பதிலாக சமணப்படுகை என்ற சொல்லயே இந்த தீர்மானத்தில் இணைக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார்.
தமிழக அரசின் தீர்மானமும், சிந்தனைச் செல்வனின் கோரிக்கையும் இப்படி இருக்க, வரலாற்று ஆய்வாளரும் தமிழறிஞருமான மயிலை சீனி வேங்கடசாமி எழுதி 1940-இல் வெளியிடப்பட்ட ‘பௌத்தமும் தமிழும்’ என்கிற நூலில், அரிட்டாப்பாட்டி பற்றி மற்றொரு பார்வையை முன்வைக்கிறார்.
“மகேந்திரர் இலங்கையில் பௌத்த மதத்தைப் போதித்தபோது, இலங்கையரசனுடைய மாமனாரான அரிட்டா என்பவர் அந்த மதத்தை மேற்கொண்டு துறவு பூண்டு பிக்குவானார். இந்த அரிட்டர் இலங்கை முழுவதும் அந்த மதத்தைப் பரப்புவதற்கு மகேந்திரருக்கு வேண்டிய உதவி செய்தார் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. பின்னர் மகேந்திரரும் அரிட்டரும் சேர்ந்து பௌத்த மதத்தைத் தமிழ்நாட்டில் பரப்பியிருக்கக்கூடும்.
பாண்டிய நாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் பிக்குகள் படுத்துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கியமைக்கப்பட்ட படுக்கைகளும், அப்படுக்கையின் கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகின்றன. இக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவை, இலங்கைத் தீவில் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காகப் பண்டைக் காலத்தில் அமைக்கப்பட்ட குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன. பௌத்தத் துறவிகள் ஊருக்குள் வசிக்கக்கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால், அவர்கள் வசிப்பதற்காக மலைப் பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக்காலத்து வழக்கம். இலங்கையிலும் பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் ஒற்றுமையமைப்பைக் கொண்டு இவை பௌத்தத் துறவிகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டவை என்றும், இப்பாண்டி நாட்டுக் குகைகளில் காணப்படும் எழுத்துகளைக் கொண்டு (இவை அசோகா காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதால்), இவை கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படும் பாண்டி நாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி என்னும் கிராமத்துக் கருகில் இருக்கின்றது. 'அரிட்டாபட்டி' என்னும் பெயர், இலங்கையிலிருந்து வந்து தமிழ்நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச்செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர் என்னும் பிக்குவை நினைவூட்டுகின்றது.
இந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும், ஆனது பற்றியே இக்குகைக்கருகில் உள்ள சிற்றூர் 'அரிட்டாபட்டி' என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மகாவம்சம் என்னும் நூல் மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு - அதாவது தமிழ்நாட்டிற்குச் சென்று பௌத்த மதத்தைப் பரப்பினார் என்று சொல்வதைப் பாண்டி நாட்டில் உள்ள 'அரிட்டாபட்டி' என்னும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன.” என்று சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.
அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதன் உண்மை வரலாற்றைத் தெரிந்துகொள்வதும் முக்கியம் அல்லவா?